

சென்னை:
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வருகிற 27-ந்தேதி விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி மாநாட்டுக்கான மேடை அமைப்பு பணிகள் இரவு-பகலாக நடந்து வருகிறது. இந்த பணிகளை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு பந்தலிலேயே தங்கி இருந்து கவனித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்திருப்பதால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
15, 16 மற்றும் 17-ந்தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் இடம் மழை காரணமாக சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அக்.27-ந்தேதி மாநாடு நடைபெற உள்ள நிலையில் மழை காரணமாக பணிகளில் தாமதமாகி உள்ளன.