

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை ஆட்சியை அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுக்காதது கண்டனத்துக்குள்ளாகி உள்ளது. இதுதொடர்பாக இன்று 2 முறையாக த.வெ.க. தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்துள்ளார்.
இதனிடையே, த.வெ.க. தலைவர் விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பதவி ஏற்புக்கு முன்பு தவெக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல. அரசியலமைப்பு சட்டத்தை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும். த.வெ.க. தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்பட அவகாசம் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல், நடிகர் பிரகாஷ் கவர்னருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆளுநரின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது. நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அவையில் தனது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், தனிப்பெரும் கட்சியாக த.வெ.க.வை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். எனவே விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையதல்ல என தெரிவித்து இருந்தார்.