

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் குப்பம் வட்டத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகவும், அங்கு தமிழ்த்துறையில் பணியாற்றும் 1 பேராசிரியர், 1 இணைப்பேராசிரியர், 2 உதவி பேராசிரியர்களின் ஊதியத்திற்காகவும் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை நிதி வழங்கி வருகிறது. அதனால், தமிழ்த்துறையில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஊதியத்திற்கு தமிழக அரசு நிதி வழங்காததால் அவர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தான் பணியாற்றி வருகின்றனர்.
ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் அவற்றின் மொழி சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்து ஊதியம் வழங்க நிதி வழங்குகின்றன. அதேபோல், தமிழ்நாடு அரசும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஊதியத்திற்கும் நிதி வழங்க வேண்டும். அதைக் கொண்டு அங்கு தமிழ்த்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே பணியாளரை பணி நிலைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.