ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பொன்மொழிகள் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு

குருதேவ் தாகூரின் வார்த்தைகள், தலைமுறைகள் கடந்தும் புவியியல் எல்லைகளைத் தாண்டியும் நமது மனங்களை இன்றும் தொடர்ந்து ஒளிரச் செய்து வருகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பொன்மொழிகள் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு
Published on

சுவீடனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியிடம் இந்திய எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 2 பொன்மொழிகள் குறிப்புகளின் நகலை சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் வழங்கினார்.

இதுதொடர்பாக உல்ப் கிறிஸ்டர்சன் கூறும்போது, புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூர் கையால் எழுதிய 2 பொன்மொழிகளின் நகல் ஒன்றை, பிரதமர் மோடியிடம் நேரில் ஒப்படைக்கும் பெருமை எனக்குக் கிடைத்தது.

ரவீந்திரநாத் தாகூருக்கு 1913-ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் எழுதிய இக்கவிதைகள் சுவீடன் தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இப்பரிசு சுவீடன், இந்தியா நாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவுகளுக்குச் சான்றாக விளங்குகிறது என்றார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறியதாவது:-

குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் கையெழுத்துப் பிரதிகளான 2 பொன் மொழிகளின் நகல்களைப் பெற்றதில் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். நமது நாடுகளுக்கு இடையேயான நீடித்த பண்பாட்டுப் பிணைப்புகளைப் பிரதிபலிக்கும் இந்த அன்பான செயலுக்காக, சுவீடன் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குருதேவ் தாகூரின் வார்த்தைகள், தலைமுறைகள் கடந்தும் புவியியல் எல்லைகளைத் தாண்டியும் நமது மனங்களை இன்றும் தொடர்ந்து ஒளிரச் செய்து வருகின்றன. மனித மாண்பு, அறிவு மற்றும் சகோதரத்து வம் குறித்த அவரது தத்து வம் காலத்தால் அழியாதது என்று தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com