TN Assembly Election| தேர்தலில் களம் இறங்காத முன்னாள் அமைச்சர் பொன்முடி

2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது திருக்கோவிலூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
TN Assembly Election| தேர்தலில் களம் இறங்காத முன்னாள் அமைச்சர் பொன்முடி
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்காக வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணல் இன்றுடன் முடிவடைகிறது.

நேற்று அண்ணா அறிவாலயத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் இந்த நேர்காணல் நடைபெற்றது.

இதில் திருக்கோவிலூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சரும், தற்போதைய அந்த தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொன்முடி போட்டியிட விருப்ப மனு அளிக்கவில்லை. அத்தொகுதிக்கு பொன்முடியின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான பொன். கவுதமசிகாமணி விருப்ப மனு அளித்து இருந்தார்.

அவரிடம் நேர்காணல் நடைபெற்றது. இதனால் திருக்கோவிலூர் தொகுதியில் பொன்முடி போட்டியிட விரும்பவில்லை என தெரிகிறது.

பொன்முடி கடந்த 1989-ம் ஆண்டு முதல் முறையாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து 91, 96, 2001, 2006, 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பொன்முடி விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டார். இதில் 91, 2011-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அவர் தோல்வியை தழுவினார். 2011-ம் ஆண்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகத்திடம் தோல்வியை தழுவினார். மற்ற தேர்தல்களில் அவர் வெற்றி வாகை சூடினார்.

2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது திருக்கோவிலூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. அதுவரை விழுப்புரத்தில் போட்டியிட்ட பொன்முடி 2016-ம் ஆண்டு திருக்கோவிலூர் தொகுதிக்கு மாறினார். அந்த தொகுதியில் 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பொன்முடி போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் வெற்றி வெற்ற அவர் தி.மு.க. அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தார்.

அதன் பின்னர் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை.

எனவே அவர் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என கூறப்படுகிறது. ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்கு பின்னர் பொன்முடி தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொன்முடிக்கு பதிலாக அவரது மகன் திருக்கோவிலூர் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்து உள்ளதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது கட்சி மேலிடத்தின் முடிவை பொறுத்தே அமையும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com