வெங்கல் அருகே இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 6 பேர் படுகாயம்

கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து பட்டாசுகளும் படபடவென வெடித்து சிதறியது. இரண்டு பேர் கண் சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெங்கல் அருகே இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 6 பேர் படுகாயம்
Published on

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள சித்தம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகதீசன்(வயது56) என்பவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் பலியானார்.

இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டில் இருந்து சித்தம்பாக்கம் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று அன்று மாலை அடக்கம் செய்தனர். அவரது உடலை கொண்டு சென்ற வாகனத்தின் முன் பகுதியில் பட்டாசுகள் இருந்த பையை மாட்டி வைத்திருந்தனர். அப்பொழுது ஒரு ராக்கெட் வெடித்ததில் அதிலிருந்து நெருப்பு சிதறி பட்டாசு வைத்திருந்த பையில் விழுந்தது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து பட்டாசுகளும் படபடவென வெடித்து சிதறியது.

இதனால் இறுதி ஊர்வலத்தின் வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஜெகதீசனின் மகன் விவேக் என்பவரது நண்பர்களான முகேஷ்(வயது18), சுரேஷ், அஸ்வின் உள்ளிட்ட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆறு பேரையும் மீட்டு சென்று திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில், ஜெகதீசனின் உடல் அடக்கமும் நடைபெற்றது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேரில் முகேஷ் என்பவர் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இரண்டு பேர் கண் சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் இப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com