வெளிநாடுகளுக்கு 1.74 லட்சம் டன் மஞ்சள் ஏற்றுமதி- விவசாயிகள் மகிழ்ச்சி

மற்ற நாடுகளின் விலையை விட குறைவான விலையில் இந்திய மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுவதும் நமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.
வெளிநாடுகளுக்கு 1.74 லட்சம் டன் மஞ்சள் ஏற்றுமதி- விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

ஈரோடு மாவட்டத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் இந்தியளவில் மட்டுமின்றி உலக அளவில் தனித்துவம் பெற்று வருகிறது. இதனால் மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படும் ஈரோடு மஞ்சளுக்கு எப்போதும் உயர் மதிப்பு உள்ளது.

இதில் ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையம், செம்மாம்பாளையம் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாகவும், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலமாகவும் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஏலத்தில் வெளி மாவட்டம் வெளிமாநில வியாபாரிகள் நேரடியாக வந்தும் மஞ்சளை கொள்முதல் செய்து செல்கின்றனர். இது தவிர வெளிமாநிலங்களுக்கும் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்திய மஞ்சள் மக்களின் உணவுகளிலும் நறுமண பொருளாகவும் நிறமியாகவும் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளும் நிறைந்துள்ளதால் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2025-26 -ம் இந்தியா ஆண்டில் இந்தியாவில் இருந்து மஞ்சள் ஏற்றுமதி கூடுதலாக 5% வரை அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நிலவும் சாதகமான கால நிலை மண்வளம் மற்றும் தொழிலாளர்கள் காரணமாக உலக அளவில் 80 சதவீத மஞ்சள் இந்தியாவில் உற்பத்தி ஆகிறது. இதில் உலக அளவிலான மஞ்சள் வர்த்தகத்தில் 60% இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவில் ஈரோடு, சேலம்ஆகிய பகுதிகளில் பிரசித்தி பெற்ற மஞ்சள் ரகங்கள் மாறுபட்ட வண்ணங்கள் மற்றும் நறுமணத்துடன் விளைவிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம் நாட்டில் விளைவிக்கப்படும் மஞ்சளில் மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை குர்குமின் என்னும் வேதிப்பொருள் இருப்பதால் அதன் தரத்தின் காரணமாக உலக நாடுகளில் இந்திய மஞ்சளை விரும்பி வாங்குகின்றனர்.

மேலும் மற்ற நாடுகளின் விலையை விட குறைவான விலையில் இந்திய மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுவதும் நமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் தேவைக்கு தகுந்தவாறு ரசாயனங்களின் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் உயர் தர மஞ்சள் நம் நாட்டில் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க செய்து வருகிறது.

குறிப்பாக வங்கதேசம், அமெரிக்கா, மலேசியா மற்றும் வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கும் நமது மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி 1.45 லட்சம் மெட்ரிக் டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு 15 சதவீதம் அதிகரித்து 1.66 லட்சம் மெட்ரிக் டன் மஞ்சள் ஏற்றுமதி ஆகி உள்ளது.

கடந்த 2025-26 நிதி ஆண்டில் கூடுதலாக 5 சதவீதம் உயர்ந்து 1.74 லட்சம் மெட்ரிக் டன் மஞ்சள் ஏற்றுமதி ஆகியுள்ளது. அமெரிக்க வரிவிதிப்பு ஈரான் நாட்டுடன் போர் சூழல் இருந்த போதும் 5 சதவீதம் கூடுதலாக ஏற்றுமதி ஆகி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com