AIADMK | எம்.எல்.ஏ. பதவி பறிபோகும்! சி.வி. சண்முகம் தரப்புக்கு EPS தரப்பின் எம்.பி. இன்பதுரை காட்டம்

இவருடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
AIADMK | எம்.எல்.ஏ. பதவி பறிபோகும்! சி.வி. சண்முகம் தரப்புக்கு EPS தரப்பின் எம்.பி. இன்பதுரை காட்டம்
Published on

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். இவருடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார். இதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. சி.வி. சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏ.க்களில் ஒருபிரிவினர் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பின் அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. இன்பதுரை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், "அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.

சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.

சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி:

“ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.”

மேலும், உச்ச நீதிமன்றம் “சட்டமன்றக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும்.

எனவே, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை!," என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com