

தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கூறியதாவது:-
நிதி அமைச்சர் என்பது சாதாரணமானது அல்ல. 50 ஆண்டு காலம் சட்டசபையில் இருந்தும் கூட சில நேரங்களில் சிலது புரியாமல் போய்விடும்.
இப்போது உள்ளவர்கள் புதியவர்கள், நிதி செயலாளர் சொல்வது தான் சரியாக இருக்குமே தவிர நிதி அமைச்சர் சொல்வது சரியாக இருக்காது. நிதி செயலாளர் தான் அனைத்தும் தெரிந்தவராக இருப்பார்.
தமிழக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை கிடையாது அது கருப்பு அறிக்கை. த.வெ.க. ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என்பது ஆட்சியில் இருப்பவர்கள் செயல்பாடுகளை பொறுத்தது. தமிழ்நாட்டு செய்தித் தாள்களில் நான் பார்க்கும் செய்திகள் வன்முறை, கொலை, பாலியல் தொல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என படிக்க முடியவில்லை.
பாலியல் குற்றங்கள் குறித்து என்னிடம் பேசாதீர்கள். மனசு வெதும்பி போகிறது. குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும். எம்.ஜி.ஆர் கட்சிக்கே எங்கள் கட்சியில் இருந்து தான் தாவினார்கள். இன்றைக்கு இன்னொரு கட்சிக்கு தாவுகிறார்கள். அது அவர்கள் கட்சி விவகாரம்.
மேகதாது விவகாரத்தில் தற்போதைய அரசுதான் தீவிரம் காட்ட வேண்டும். அவர்கள் சொல்வது இவர்களுக்கு புரியுமா தெரியவில்லை. தமிழ்நாடு குரல் எழுப்பவில்லை என்றாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.
தீர்ப்பை படித்தால் எல்லாம் தெரியும். சுப்ரீம் கோர்ட்டு என்று ஒன்று உள்ளது. அதோட ஆணையை யாரும் மீற முடியாது, எந்த மாநிலமும் மீற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.