

கோவை விமான நிலையத்தில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக-வை மக்கள் ஏற்காததால்தான், அக்கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது. பேரவைக்கு உள்ளே இருந்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டிருந்தால், முதலமைச்சர் பதில் சொல்லியிருப்பார். பேரவைக்கு வெளியே சென்று எதிர்க்கட்சியினர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஆட்டுக்கு வால் தேவையில்லை என்பது போல நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என கிண்டல் செய்தனர்.
நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை அவர் காமெடி பேசுகின்றவர். அவர் வேண்டுமென்றே எங்களை தாக்குகிறார். திராவிட முன்னேற்ற கழகம்தான் பிஜேபியை தாக்கி கொண்டிருக்கிறது.
அவர் திமுகவுடன் சமரச முயற்சி செய்து, ஆட்சியில் இருக்கும்போது மருத்துவக்கல்லூரி ஆரம்பிப்பதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு உதவுங்கள் என்று பிஜேபி-யிடம் என்றைக்குமே ஆதரவு கேட்டது கிடையாது.
ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர், உள்துறை அமைச்சர் என அனைவரையும் சந்திக்க வேண்டும். அதனடிப்படையில் தான் முதலமைச்சர் அவர்களை சந்தித்தார்.
முதலமைச்சரின் தொலை நோக்கு சிந்தனை என்பது நேர்மையான ஆட்சியை வழங்குவது. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.