'சோபா வந்ததும் கட்சி மாறுபவர்கள் மத்தியில், நீங்கள் தான் உண்மையான தொண்டர்கள்' - உதயநிதி!

இஸ்லாமியர்களுக்கும் கழகத்திற்கும் இடையே இருக்கும் இந்த ஆழமான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.
 Udhayanidhi
Published on

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா அவர்களின் இல்லத் திருமண விழாவில், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாகவும் பேசினார்.

கட்சியை விட்டுச் சென்றவர்கள் குறித்து விமர்சனம்..

மணமக்களை வாழ்த்தி மேடையில் பேசிய அவர், "இன்றைக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இன்றைய சூழ்நிலையில், சிலர் சோபா வந்தவுடன் நம்முடைய கட்சியை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால், இங்கு கூடியிருக்கும் நீங்கள் அனைவரும் என்றும் நம் கழகத்தோடுதான் இருப்போம் என்ற உறுதியோடு வந்துள்ளீர்கள்" என்று பேசினார்.

இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் காவல் அரண்..

தொடர்ந்து திமுக மற்றும் இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையிலான உறவு குறித்துப் பேசிய அவர், "இஸ்லாமியர்களுக்கும் கழகத்திற்கும் இடையே இருக்கும் இந்த ஆழமான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், எந்தவொரு அவதூறுகளைப் பரப்பினாலும், சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் திமுக என்றும் ஒரு காவல் அரணாக இருக்கும். நமது தலைவர் மு.க.ஸ்டாலினும், திராவிட முன்றேற்ற கழகமும் நிச்சயமாக எப்போதும் உங்களுடன் நிற்கும்" என்று உறுதியளித்தார்.

அரசியல் பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டை காப்போம்..

"இப்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பேரிடர் காலத்திலும், நமது தமிழ்நாட்டை திமுக கட்சி காக்கும்; நாட்டையும் காப்போம்" என்று கூறி மணமக்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com