

திமுக ஆட்சியில், பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கேட்டபோது, லஞ்சம் கேட்டதாக சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது’;
“கலைவாணி கல்வி மையம் என்ற அமைப்பின் கீழ், தென்காசி மற்றும் தேனியில் இரண்டு இலவச NIOS (தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்) கிராமப்புறப் பள்ளிகளை நாங்கள் நடத்தி வருகிறோம்.
தேனிப் பள்ளி முதலில் ஒரு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. அவர் ஒரு நேர்மையான, ஒழுக்கமான மனிதர். அவர் மிகச் சிறந்த வசதிகளைக் கொண்ட பள்ளியை உருவாக்கியிருந்தார். ஆனால் தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு மாநில அரசு அதிக பணம் கேட்டது.
இதனால் அவர் அந்த சிபிஎஸ்இ பள்ளியை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு நேர்மையான ஓய்வுபெற்ற அதிகாரியாகத் தன்னிடம் அதற்கான பணம் இல்லை என்றும், பணம் கொடுக்காவிட்டால் திமுக தடையில்லா சான்றிதழ் வழங்க மாட்டார்கள் என்றும் என்னிடம் கூறினார்.
நாங்கள் அந்த வளாகத்தில் எங்கள் இலவச என்.ஐ.ஓ.எஸ் பள்ளியை நடத்துவதற்காக, அவருடைய அறக்கட்டளையை எங்களை ஏற்குமாறு அவர் வற்புறுத்தினார். அப்படித்தான் நாங்கள் தேனியில் எங்கள் பள்ளியைத் தொடங்கினோம்.
நான் வசிக்கும் தென்காசியைப் போல் அல்லாமல், மாநில அரசின் பதிவு இல்லாததால், தேனிப் பள்ளிக்கு திமுக அரசிடமிருந்து அவ்வப்போது நெருக்கடிகள் வந்தன; எனவே, மாநில அரசின் அங்கீகாரத்தைப் பெற முயன்றோம்; அதற்கும் நிச்சயமாக பணம் (லஞ்சம்) செலவாகும். எனவே, அது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இழுபறியிலேயே இருந்தது.
இதற்கிடையில் தென்காசியில் நாங்கள் புதிய பள்ளி வசதிகளை உருவாக்க விரும்பினோம் (நாங்கள் தற்காலிக வசதிகளில்தான் இயங்கி வந்தோம், அவைதான் அடிக்கடி புகைப்படங்களில் வந்தன). புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு டி.டி.சி.பி -யிடம் (நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம்) அனுமதி கோரி விண்ணப்பித்தோம்.
நம் மாநிலத்தில் டி.டி.சி.பி -யைப் பற்றி அறிந்த அனைவருக்கும், திமுக ஆட்சியில் அங்கு எந்த மாதிரியான ஊழல் நடைபெற்றது என்பது தெரியும்.
புதிய பள்ளிக் கட்டடங்களுக்கான டி.டி.சி.பி ஒப்புதலுக்காக நாங்கள் பொறுமையுடன் காத்திருந்தோம், ஆனால் தி.மு.க ஆட்சியில் இருந்தவரை அந்த ஒப்புதல் வரவே இல்லை. அரசாங்கம் மாறியவுடன் அந்த ஒப்புதல் தானாகவே வந்தது.
இந்த டி.டி.சி.பி ஒப்புதலைப் பற்றித்தான் நான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தேன். இந்த புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை நான் மீண்டும் ஒருமுறை பாராட்ட விரும்புகிறேன்.
ஒப்புதல்கள் வந்தது மட்டுமன்றி, எந்தவொரு ஒப்புதலுக்காகவும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் எங்களிடம் கூறினர். இதற்கு முன்பு நாங்கள் சந்தித்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்த நல்ல மாற்றத்தை நான் பொதுவெளியில் பாராட்டவே வேண்டும்.
இதனை வைத்துத்தான் திமுகவினர் என் மீது 'பொய்' என்று குற்றம் சாட்டுகின்றனர்.என் நடத்தைக்கு அவர்களின் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை.எப்போதும் கணினி நிரலாக்கப் பணிகளில் மூழ்கிக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற ஒரு தொழில்நுட்ப வெறியன் ஏன் இதைப் பதிவிட வேண்டும் என்று அவர்கள் தங்கள் மனசாட்சியைத் தொட்டுத் கேட்டுக்கொள்ளட்டும்.
நான் ஒரு பிராமணன், த.வெ.க-வின் கைக்கூலி, சங்கி, அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அவர்களுடைய இழிவான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நான் பணிந்துவிடுவேன் என்று அவர்கள் நினைத்தால், நான் அவர்களுக்கு இதைச் சொல்லிக் கொள்கிறேன்:
வாரிசு அரசியல்வாதிகளான உங்களைப் போலன்றி, நான் ஏதுமற்றவனாகத்தான் வளர்ந்தேன். நான் தமிழ்வழிக் கல்விப் பள்ளிகளில் படித்தவன். ஏதுமில்லாமலும் எப்படி வாழ்வது என்பது எனக்குத் தெரியும்.
நமது நித்திய சனாதன நாகரிகத்தின் ஆன்மாவான நமது கிராமப்புறங்களை மறுமலர்ச்சி செய்யும் அதே வேளையில், தொழில்நுட்பத்தில் பாரதத்தை சுயசார்புடையதாக மாற்றுவதற்காக என் வாழ்நாளின் எஞ்சிய பகுதியை நான் அர்ப்பணித்துள்ளேன்.
அவர்களின் இந்தத் தாக்குதல்களுக்கு நான் அஞ்சமாட்டேன். எனக்கு மரணத்தைக் கண்டே பயமில்லை, அப்படியிருக்க வெறும் தி.மு.க-வைக் கண்டு நான் ஏன் பயப்படப் போகிறேன்?
திமுகவினருக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பித் தரலாம் (அதை அவர்கள் எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்) அதற்கு பிறகு அவர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.
இப்போது மீண்டும் என் வேலைக்கு (Compiler) திரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.