TN Assemby Election| தமிழகம் முழுவதும் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது- 18-ந்தேதிக்குள் வினியோகிக்க ஏற்பாடு

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகத்திற்கான அட்டவணையை தயாரித்து உள்ளனர்.
TN Assemby Election| தமிழகம் முழுவதும் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது- 18-ந்தேதிக்குள் வினியோகிக்க ஏற்பாடு
Published on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த தேர்தல்களில் வழங்கப்பட்டு வந்த புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்களுக்குப் பதிலாக, இந்த முறை தேர்தல் ஆணையம், வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. வாக்காளர்களின் வசதியை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட வடிவமைப்பில் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பகுதி எண் ஆகியவை சீட்டின் மேல் வலது மூலையில் பெரிய எழுத்துருவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.

இந்த மாற்றம் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் காணவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்காளர் பெயரை வாக்காளர் பட்டியலில் விரைவாக கண்டறியவும் உதவியாக இருக்கும்படி அமைக்கப்பட்டு உள்ளது.

அதில் ஒரு வாக்காளரின் பெயர், வயது, பாலினம், சட்டமன்றத் தொகுதி, வாக்குச்சாவடி அமைவிடம் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் தேதி, நேரம் போன்ற விவரங்கள் அடங்கியுள்ளன. இதில் தனிப்பட்ட மற்றும் வாக்குப்பதிவுத் தகவல்கள் இருந்தாலும், வாக்களிப்பதற்கு அதைத் தனிப்பட்ட அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கியது. இவை அந்தந்த பகுதிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக விநியோகம் செய்யப்படுகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகத்திற்கான அட்டவணையை தயாரித்து உள்ளனர். அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாக சென்று இவை வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கும் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டினை வழங்கி கையெழுத்து அல்லது விரல் அடையாளத்தைப் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விநியோகிக்கப்படாத வாக்காளர் தகவல் சீட்டு அனைத்தும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திருப்பி வழங்கிடவும், அவை மூடும் உறையில் பாதுகாப்பாக வைத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ந்தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த பணியை தேர்தல் அதிகாரியும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com