

கன்னியாகுமரி மாவட்டத்தில் திராவிடக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகளுக்கு இடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதில் குறிப்பாக குமரி மேற்கு மாவட்டத்தில், விளவங்கோடு தொகுதி அக்கட்சியின் கோட்டையாகவே திகழ்கிறது.
இத்தொகுதியில் இதுவரை 10 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போட்டியிட்டுள்ளது. 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட மணி வெற்றி பெற்று, முதல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1980, 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அபார வெற்றி பெற்றது. எனினும், 2011-ம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி இத்தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இதேபோல், பத்மநாபபுரம் தொகுதியில் 1989-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் களம் இறங்கிய நூர் முகமது வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில், அ.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடையே பலத்த போட்டி நிலவியது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட லாரன்ஸ் வெற்றி பெற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி வாய்ப்பை இழந்தது.
கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு, குமரி மாவட்டத்தில் சுமார் 15 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. கூட்டணி ஒப்பந்தங்களின் அடிப்படையில் மற்ற கட்சிகளுக்கே தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வந்தன. இதனால் கம்யூனிஸ்டு தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், இந்த முறை எப்படியாவது ஒரு தொகுதியை பெற வேண்டும் என்று கம்யூனிஸ்டு, திமுகவிடம் வலியுறுத்தி வந்தது. தொகுதி பங்கீட்டில் நீடித்து வந்த இழுபறிக்குப் பிறகு, இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பது கம்யூனிஸ்டு தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1991-ம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது கடந்த 35 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சிகளே நேரடியாக மோதி வந்த பத்மநாபபுரம் தொகுதியில், தற்போது மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு களம் காண உள்ளது. இத்தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து கட்சித் தலைமை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதால், பத்மநாபபுரத்தில் இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தொகுதி கடந்த 20 ஆண்டுகளாக தி.மு.க. வசம் இருந்து வருகிறது.
2006-ம் ஆண்டு அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரெஜினால்டு வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் புஷ்பலீலா ஆல்பன் வெற்றிவாகை சூடினார். 2016, 21 தேர்தலில் மனோ தங்கராஜ் வெற்றி பெற்றார்.அவர் தற்போது அமைச்சராகவும் இருந்து வந்தார். இந்த முறை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அமைச்சருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக தி.மு.க. வசம் இருந்த தொகுதி கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.