

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்ற தவெக பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. அப்போது திமுக கூட்டணியில் 5 இடம் வென்ற காங்கிரஸ் தவெகவுக்கு தாவியது.
மேலும் திமுக கூட்டணியில் தலா 2 இடங்கள் வென்ற விசிக, சிபிஐ, சிபிஐ(எம்), ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரி வந்தது.
இழுபறிக்கு பின் இக்கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.
விஜய் 3 முறை ஆளுனரை சந்தித்து மெஜாரிட்டி இல்லாமல் திரும்பிய நிலையில் நான்காவது முறையாக இன்று ஆதரவு கட்சி தலைவர்களுடன் சந்தித்து ஆட்சி அமைக்க ஆளுநரின் ஒப்புதலை பெற்றார்.
ஆதரவு கட்சிகளுடன் சேர்த்து 120 இடங்கள் இருந்ததால் ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. விஜய் முதல்வர் பதவி ஏற்க, அவருடன் 9 பேர் அமைச்சராக பதவி ஏற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் தவெக வரும் மே 13 (புதன்கிழமை) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
அப்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தவெக பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும். விஜய்க்கு ஆதரவளித்த கட்சிகள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் சில நாட்களுக்கு விஜய்க்கு வழங்கப்பட்டு திரும்பபெறப்பட்ட கான்வாய் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
எந்த இடத்தில் இருந்து கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டதோ, அதே இடத்தில் இருந்து மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கவர்னரை சந்தித்த பிறகு கான்வாய் பாதுகாப்புடன் த.வெ.க. தலைவர் விஜய் பட்டினப்பாக்கம் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
மேலும், இன்று மினி கான்வாய் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நாளை பதவியேற்பு விழா நடந்த பிறகு விஜய்க்கு முதலமைச்சருக்கான முழு கான்வாய் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.