தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறும்: கிரிஷ் சோடங்கர் திட்டவட்டம்

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்தது.
தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறும்: கிரிஷ் சோடங்கர் திட்டவட்டம்
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க.வுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

இதனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்தது. மேலும், வரும் காலங்களிலும் இந்தக் கூட்டணியே தொடரும் என அறிவித்தது.

ஏற்கனவே ஆட்சியில் பங்கு என உறுதியளித்து இருக்கும் முதலமைச்சர் விஜய் காங்கிரசையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவிகளும், ஒரு மேல்சபை எம்.பி. பதவியும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. 2 அமைச்சர் பதவிகள் மட்டுமே வழங்கலாம் என இருப்பதால் அதை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களுடன் சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் செல்வப்பெருந்தகை உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காங்கிரஸ் தோல்விக்கான காரணங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்ற 5 எம்.எல்.ஏ.க்களையும் கிரீஷ் சோடங்கர் ராகுலைச் சந்திப்பதற்காக இன்று டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பதா அல்லது வெளியில் இருந்து த.வெ.க. அரசுக்கு ஆதரவு கொடுப்பதா என்பது பற்றியும் விவாதித்து முடிவு செய்வார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

எத்தனை அமைச்சர்கள் என்பது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனது பலத்தை வெளிப்படுத்தும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com