திருப்பதி உண்டியலில் போட கொண்டு சென்ற நாணயங்கள் பறிமுதல்- மணிக்கணக்கில் எண்ணிய ருசிகரம்

பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பதி உண்டியலில் போட கொண்டு சென்ற நாணயங்கள் பறிமுதல்- மணிக்கணக்கில் எண்ணிய ருசிகரம்
Published on: 

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் உஷா நந்தினி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திண்டிவனத்தில் இருந்து ஞானவேல் என்பவரின் குடும்பத்தினர் காரில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். ஞானவேலின் காரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஞானவேல் திருப்பதி உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக 1,2,5,10 ரூபாய் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் என நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சிறிது சிறிதாக சேர்த்து வைத்த ரூ.67,507 அவரது காரில் இருந்தது.

அங்கிருந்த அதிகாரிகள் நாணயங்களை கொட்டி நீண்ட நேரமாக எண்ணினர். ஞானவேல் கோவில் உண்டியல் காணிக்கைக்காக பணத்தை எடுத்துச் செல்வதாக அதிகாரிகளிடம் மன்றாடி கேட்டுக்கொண்டார்.

அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டும் பணம் திருப்பி தர முடியும் என தெரிவித்தனர். அப்போது ஞானவேல் திருப்பதி கோவிலுக்கு சிறிது சிறிதாக சேர்த்து வைத்து எடுத்துச் செல்லும் பணத்திற்கு எந்த ஆவணத்தை கொடுப்பது என நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தார். பின்னர் ஏமாற்றத்துடன் திருப்பதிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com