முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, டிகே.பிரபு பிறந்தநாள் வாழ்த்து

உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்.
Aadha Arjuna - CM Vijay, CM Vijay - TK Prabhu
Published on

தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அமைச்சர் டிகே.பிரபு ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

மதிப்பிற்குரிய கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; "மக்கள்தானே மன்னர்கள்" என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்!

இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது "மக்கள் ஊழியனாக" அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.

"மக்களிடம் செல்" என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. "மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே" என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன்.

உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் டிகே.பிரபு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

ஒட்டுமொத்த தமிழகத்தின் நம்பிக்கை, மக்கள் மனங்களை வென்ற ஜனநாயகன் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இளைஞர்களின் எழுச்சி நாயகனாய், தாய்மார்கள், குழந்தைகளின் அன்பு நட்சத்திரமாய் விளங்குபவர் முதலமைச்சர் விஜய்

மக்களுக்கான ஒரு நேர்மையான ஆட்சியை தமிழகம் இன்று கண்டு வருகிறது, இனியும் காணப்போகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com