டெல்லியில் பிரமாண்டமான தமிழ்நாடு இல்லம்- அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.இக்கட்டிடம் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது.
டெல்லியில் பிரமாண்டமான தமிழ்நாடு இல்லம்- அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
Published on

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, புதுடெல்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

18.6.2021 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புதுடெல்லி மிக தீவிர நில அதிர்வு மண்டலம் 4 ஆக மறு வகைப்படுத்தப்பட்டு உள்ளதை கருத்தில் கொண்டு வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தினை பழைய கட்டிடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆலோசனை நடத்தினார். அதன்படி, விரிவான வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட்டன.

புதியதாக கட்டப்பட உள்ள இக்கட்டிடம் மிக தீவிர நில அதிர்வை எதிர்கொள்ளும் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டு, இந்திய தொழில்நுட்பக்கழகம், சென்னை மூலம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் பொதுத் துறையால் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தை மறுசீரமைத்து புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு 257 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்புதிய கட்டிடம் மிக முக்கிய பிரமுகர் தொகுதி, விருந்தினர் மாளிகை தொகுதி மற்றும் அலுவலர்கள் குடியிருப்புத் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. இக்கட்டிடம், 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது.

மேலும், மிக முக்கிய பிரமுகர் அறை, 39 முக்கிய பிரமுகர்கள் அறைகள், 60 உயர்தர அறைகள் , 72 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் கூடம், பல்நோக்கு அரங்கம், 3 உணவருந்தும் அறைகள், காத்திருப்பு அறைகள், கண்காட்சி அறை, மிக முக்கிய பிரமுகர்களின் முகாம் அலுவலகம், சந்திப்பு அறைகள், உடற்பயிற்சி மையம், வணிக மையம், நூலகம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் இப்புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் (மரபு) ஜெ.இ. பத்மஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com