

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் நடத்த உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் திரண்டது. பல இடங்களில் அவர் பிரசாரம் செய்வதற்கு போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய 3 முறை திட்டமிடப்பட்டு, அது முடியாமல் போனது. இதுபோன்று பல மாவட்டங்களில் அவரால் பிரசாரம் செய்ய முடியாத நிலை இருந்தது. இந்தநிலையில், தேர்தலில் த.வெ.க. மகத்தான வெற்றியை பதிவு செய்தது. முதலமைச்சராக விஜய் பதவி ஏற்று இருக்கிறார்.
சட்டசபையில் பதவியேற்பு மற்றும் நம்பிக்கை தீர்மானத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், அடுத்தக்கட்டமாக, மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார். த.வெ.க. தலைவராக மக்களை சந்தித்த விஜய் தற்போது, முதலமைச்சராக மக்களை சந்திக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது விடுபட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று முதலமைச்சர் விஜய் மக்களை சந்தித்து நன்றி கூற இருக்கிறார். மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற உள்ளார்.
மக்கள் சந்திப்பு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விரைவில் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு பயண திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலங்களிலும், அதிகாரிகளிடமும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த இருக்கிறார்.