TN Assembly Election| மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சிவகிரியில் ரோடு ஷோ- பலத்த போலீஸ் பாதுகாப்பு

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு சிவகிரியில் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
TN Assembly Election| மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சிவகிரியில் ரோடு ஷோ- பலத்த போலீஸ் பாதுகாப்பு
Published on

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் வரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதனால் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈரோட்டுக்கு நாளை வருகிறார் . மொடக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாரை ஆதரித்து அமித்ஷா ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். பின்னர் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா ஈரோடு மாவட்டம் சிவகிரியில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாமரை பாளையம் பகுதியில் உள்ள தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு காலை 9:30 மணிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அங்கே அவருக்காக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து கார் மூலமாக காலை 10 மணிக்கு சிவகிரி வருகிறார். சிவகிரி அரசு ஆஸ்பத்திரி அருகில் இருந்து அமித்ஷா ரோடு ஷோவை தொடங்குகிறார். அங்கிருந்து சிவகிரி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தீரன் சின்னமலை சிலை வரை 700 மீட்டர் தூரம் நடைபெறவுள்ள ரோடு ஷோவில் அமித்ஷா கலந்து கொள்கிறார் . பின்னர் அங்கிருந்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அமித்ஷா கிளம்புகிறார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு சிவகிரியில் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு எஸ். பி. கிரண் சுருதி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் தாமரை பாளையம் டெலிபேட் பகுதியில் இருந்து அமித்ஷா பங்கேற்கும் ரோடு ஷோ பகுதி வரை தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் இருந்து காரில் சிவகிரி வரும் தூரம் வரை மெயின் ரோட்டை ஒட்டியுள்ள குடியிருப்புகள் கடை வியாபாரம் செய்பவர்களின் முகவரி மற்றும் ஆதார் அட்டைகளை வாங்கி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் தாமரை பாளையத்தில் உள்ள தாமரை மெட்ரிக் பள்ளி மைதானம் மற்றும் சிவகிரி செல்லும் பகுதிக்குள் டிரோன்கள், இதர ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்விழி விமானங்கள் பறக்க விடும் நபர்கள் மீது நடவடிக்கை கடும் எடுக்கப்படும் என்று ஈரோடு கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார் .

தொடர்ந்து தலைவர்கள் வருகையால் ஈரோடு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com