

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் செட்டி தெருவில் வி.சி.க. வேட்பாளரை ஆதரித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று இரவு கூட்டத்தில் பேசினார்.
அப்போது திடீரென குமராட்சி ஒன்றிய வி.சி.க. பொருளாளர் நடுத்திட்டை சேர்ந்த சங்கர், செல்வராஜன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்பவருடன் கழுத்தில் மாலையுடன் திருமண கோலத்தில் மேடைக்கு வந்தார்.
அப்போது சங்கர், தனக்கு இந்த மேடையில் திருமணம் செய்து வைக்குமாறு திருமாவளவனிடம் கேட்டுக்கொண்டார். அந்த தொண்டரின் வேண்டுகோளை ஏற்று திருமாவளவன், மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். அதன் பின்னர் மணமக்களுக்கு அச்சதை தூவி வாழ்த்தினார்.
இதனால் தேர்தல் பிரசார மேடை திருமண மேடையாக மாறியது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே மகிழ்ச்சியும், ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியது. திருமாவளவன், தொண்டர்கள் மீது வைத்த பற்றினை இந்த சம்பவம் எடுத்து காட்டுவதாக அமைந்தது.