

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை தழுவிய நிலையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.,வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் சி.விஜயபாஸ்கர். குறிப்பாக த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவளித்து சட்டமன்றத்தில் வாக்களித்தார். இதனால் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்கி புதிய மாவட்ட செயலாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனால் கடும் அதிருப்தியடைந்த விஜயபாஸ்கர் அப்போதே வேறு கட்சியில் இணைய திட்டமிட்டார். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. சீனியர்கள் பலரும் சென்று சேர்ந்துள்ள நிலையில், அந்த கட்சிக்கு செல்லலாமா? என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் தொடர்ச்சியாக கருத்து கேட்டு வந்தார்.
அப்போது பல்வேறு கருத்துக்களை அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் விஜயபாஸ்கர் எந்த முடிவெடுத்தாலும் அவருடன் செல்ல ஏராளமான கட்சி நிர்வாகிகள் உள்ளனர். விஜயபாஸ்கருக்கு ஆதரவாக விராலிமலை பகுதி முழுவதும் ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
தொடர்ந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் இறுதியாக த.வெ.க.வில் இணைய விஜயபாஸ்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.பதவியை சி.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து கடிதம் வழங்கினார் சி.விஜயபாஸ்கர். இதனை தொடர்ந்து சி.விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால் அ.தி.மு.க.வின் பலம் 42-ஆக குறைந்தது.
ஏற்கனவே அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளனர். தற்போது விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளதால் விராலிமலை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் ராஜினாமா, திருச்சி கிழக்கு தொகுதி உட்பட தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, நாளை வளர்பிறை முகூர்த்தநாள் என்பதால் அன்று த.வெ.க.வில் இணைய விஜயபாஸ்கர் முடிவு செய்துள்ளதாகவும், தொகுதி மக்களின் கருத்தை கேட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.