

வேட்டவலம்:
திருவண்ணாமலையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை விழுப்புரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ்சில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி அடுத்த மாலவாய் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் (வயது 40) என்பவர் பயணம் செய்தார். இவர் சமயபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். பஸ் வேட்டவலம் வந்ததும் பயணிகள் இறங்கினர். மீண்டும் பஸ் வேட்டவலம் -விழுப்புரம் சாலையில் சென்றபோது டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடியது.
பின்னர் சாலையோரம் உள்ள பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த கனகராஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வேட்டவலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.