

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக விமான நிலையம், ரெயில் நிலையம், ஐகோர்ட், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் நேற்றும் மதுரை தலைமை தபால் நிலையம், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பின்னர் இந்த தகவல் புரளி என தெரிந்தது.
இந்நிலையில் இன்று காலை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலமாக மிரட்டல் வந்தது.
இதையடுத்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடம், கூடுதல் கட்டிட வளாகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தியிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் மெட்டல் டிடெக்டர் மூலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள துறை வாரியான அறைகள், பயன்பாடற்ற பொருட்கள் வைக்கும் அறை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் இல்லாத நிலையில், இமெயில் மூலமாக அனுப்பப்பட்ட தகவல் புரளி என தெரியவந்தது.
இந்த அதிரடி சோதனை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.