

திண்டுக்கல்:
திண்டுக்கல்-திருச்சி பைபாஸ் சாலையில் பிரபல திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நேற்று இரவே வரத் தொடங்கினர்.
இன்று காலையில் மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட சடங்குகள் நடத்தப்பட்டு பின்னர் மணமகளுக்கு திருமாங்கல்யம் அணிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
மேலும் பந்தியில் காலை உணவு பரிமாறப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் திடீரென திருமண மண்டபத்துக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இதனால் திருமண வீட்டுக்கு வந்தவர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து திருமண வீட்டார் அனைவரும் மண்டபத்தை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தலைதெறிக்க வெளியே ஓடி வந்தனர்.
மேலும் மணமக்களையும் தாலி கட்டாமல் வெளியே உறவினர்கள் அழைத்து வந்தனர். மண்டபத்தில் இருந்த விலை உயர்ந்த நகை மற்றும் பொருட்களையும் வெளியே கொண்டு வந்தனர். அதன் பிறகு மண்டபம் முழுவதும் அங்குலம் அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மோப்பநாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சோதனை நடந்து வரும் நிலையில் அதன் முடிவில்தான் வெடிகுண்டு உள்ளதா? அல்லது இது புரளியா? என தெரியவரும். ஆனால் உரிய நேரத்தில் மணமகளுக்கு தாலிகட்டாமல் மண்டபத்தை விட்டு வெளியேறியதால் திருமணத்துக்கு வந்தவர்கள் சோகமடைந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.