அண்ணாமலையை சமரசப்படுத்த பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் - சமாதானம் ஆவாரா?

தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க. மிகவும் பலவீனமாக இருக்கிறது.
அண்ணாமலையை சமரசப்படுத்த பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் - சமாதானம் ஆவாரா?
Published on

தமிழக பா.ஜ.க.வில் அண்ணாமலை விவகாரம் டெல்லி வரை பஞ்சாயத்திற்கு சென்று உள்ளது. அவர் சமாதானம் ஆவாரா அல்லது தனி வழியில் செல்வாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரி பதவியை உதறி விட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். கடந்த 2020-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது அதிரடி அரசியலால் இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்திலேயே தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்.

ஆனால் அரசியலில் ஏற்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையால் கட்சி மேலிடம் அவரை தலைவர் பதவியில் இருந்து விடுவித்தது. நயினார் நாகேந்திரனை புதிய தலைவராக நியமித்தது. இந்த மாற்றம் அண்ணாமலை ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

வலைதளங்களில் சொந்த கட்சிக்குள்ளேயே கட்சியினர் காரசாரமாக மோதிக் கொள்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. 27 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. இதற்கு பா.ஜ.க.வில் தலைமை சரியில்லாததே காரணம் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் விமர்சிக்க தொடங்கினார்கள்.

தனி வழி அரசியல்

இந்த நிலையில் பா.ஜ.க.வில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் தனது ஆலோசனைப்படி கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் அல்லது கட்சியை விட்டு விலகி புது அமைப்பை தொடங்கி தனி வழியில் அரசியலை நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அண்ணாமலை வந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லி மேலிடத் தலைவர்களை சந்திப்பதற்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்வதற்கு முன்பு தனது காரில் இருந்த கட்சி கொடியையும் அகற்றினார்.

எனவே அவர் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பேசப்பட்டது. டெல்லி சென்ற அண்ணாமலை அகில இந்திய தலைவர் நிதின் நபினை சந்தித்து 5 பக்கங்கள் கொண்ட ஒரு புகார் கடிதத்தையும், அத்துடன் தனது ராஜினாமா கடிதத்தையும் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது.

புகார்கள்

அவர் தனது ராஜினாமா கடிதத்தில், தன்னை தமிழக பா.ஜ.க. தலைவராக சுமார் 4 ஆண்டுகள் நியமித்ததற்காக கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்து இருந்ததாக தெரிகிறது. மேலும் புகார் கடிதத்தில், தனது கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது, மூத்த தலைவர்களால் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டது. கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது கட்சிக்குள் நிலவும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் மாநில தலைவர், மத்திய மந்திரி ஆகியோர் மீது பல்வேறு புகார்களை ஆதாரங்களுடன் குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

2024 பாராளுமன்ற தேர்தலில் 11 சதவீதமாக இருந்த பா.ஜ.க.வின் வாக்குசதவீதம் 2026 சட்டமன்ற தேர்தலில் 3 சதவீதமாக குறைந்ததற்கு அ.தி.மு.க.வுடனான கூட்டணி உள்ளிட்ட தவறான முடிவுகளே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே 2021-ல் 4 இடங்களில் வெற்றி பெற்று இருந்த பா.ஜ.க. தற்போது ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.

சமரச முயற்சி

நிதின் நபினை சந்தித்ததை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அவரிடமும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

டெல்லி தலைமை அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகவோ அவர் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளார் என்றோ அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் அண்ணாமலையை சமரசப்படுத்தும் முயற்சியில் டெல்லி மேலிடம் ஈடுபட்டு உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயினார் நாகேந்திரன்

அதன் பேரிலேயே அண்ணாமலையை டெல்லியிலேயே தங்கி இருக்கும்படி கூறியுள்ளார்கள். நயினார் நாகேந்திரனை அவசரமாக டெல்லிக்கு அழைத்து உள்ளார்கள்.

அவர் நேற்று கேரளாவில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று அகில இந்திய தலைவர் நிதின் நபின் மற்றும் மூத்த தலைவர்கள் அண்ணாமலையின் புகார்கள் குறித்தும் அவரது ஆதங்கம் குறித்தும் நயினார் நாகேந்திரனிடம் கருத்து கேட்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க. மிகவும் பலவீனமாக இருக்கிறது. இந்த நிலையில் மேலும் பலவீனம் அடைவதை டெல்லி மேலிடம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவேதான் சமரச முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாகவும் இல்லாவிட்டால் எத்தனையோ மூத்த தலைவர்கள் ஒதுங்கியும், ஓரங்கட்டப்பட்டும் போன நிலையில் அண்ணாமலையையும் கட்சி மேலிடம் கண்டு கொள்ளாமல்தான் இருந்து இருக்கும் என்று மூத்த நிர்வாகிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆதரவாளர்கள்

நாளை தனது பிறந்தநாளை கொண்டாடும் அண்ணாமலை அப்போது தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தப் போவதாக தெரிவித்து இருந்தார். டெல்லியில் இன்று நடைபெறும் சமரச முயற்சியில் அண்ணாமலை அதை ஏற்றுக் கொண்டால் தனது முடிவில் இருந்து பின்வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இல்லாவிட்டால் கட்சியில் இருந்து விலகி தனி அமைப்பை தொடங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

எனவே அண்ணாமலையுடனான சமரச முயற்சி வெற்றி பெறுமா? அவர் தனி கட்சி தொடங்குவாரா? அல்லது தனி கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com