தேர்தல் பறக்கும் படை அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர் முருகானந்தம் - டி.ஆர்.பி.ராஜா கண்டனம்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறதுதேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
தேர்தல் பறக்கும் படை அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர் முருகானந்தம் - டி.ஆர்.பி.ராஜா கண்டனம்
Published on

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் காரில் வந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் டிராபிக் ஏற்படும் என்று கருதிய கண்காணிப்பு நிலைக்குழுவினர் அவரது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறினர்.

அப்போது கோபமடைந்த ஏ.பி.முருகானந்தம் வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன் என்று சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப் படுகிறது...ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதிக்கப்படுகிறது.

அதிகாரிகளின் பணி அதுவே என்று அதை மதித்து முழுமையாக ஒத்துழைப்பது நமது கடமை !அந்தக் கடமையிலிருந்து நான் தவறுவதில்லை. ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிகாரிகள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இப்படி எந்த அதிகாரியையும் மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல.

அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல பொதுவாக மக்களையே மதிப்பதில்லை ! இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும்? அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? சிந்தியுங்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com