

கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏவான ஏ.அருண்மொழிதேவன், தாம் தொடர்ந்து அதிமுகவிலேயே நீடிக்கப் போவதாகவும், கட்சி மாறுவது குறித்த வதந்திகளுக்கு இடமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் வட்டாரங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, "நான் அதிமுகவில் தான் இருப்பேன்" என அருண்மொழிதேவன் உறுதிபடக் கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால், கட்சியின் "கொள்கை பரப்பு இணைச்செயலாளராக" அருண்மொழிதேவன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புவனகிரி தொகுதியில் தொடர்ந்து வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ள இவர், கடந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளார்.
அண்மைகாலமாக அரசியல் வட்டாரங்களில் சில முக்கியப் பிரமுகர்கள் கட்சி மாறக்கூடும் என்ற வதந்திகள் பரவி வந்த சூழலில், புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர், கடலூர் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தற்போது கட்சியின் முக்கியப் பொறுப்பான கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக தீவிரமாகப் பணியாற்றப் போவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.