Aravind Kejriwal | மு.க. ஸ்டாலினிடம் ஆணவம் இல்லை, அவர் மக்களுக்கான மனிதர் - அரவிந்த் கெஜ்ரிவால்

மக்களின் குடும்பங்களுக்கு பாடுபட மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார்.
Aravind Kejriwal | மு.க. ஸ்டாலினிடம் ஆணவம் இல்லை, அவர் மக்களுக்கான மனிதர் - அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்ட்ட தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ரோடு ஷோவில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "நான் டெல்லி முதல்-மந்திரியாக இருந்தபோது ஏழை குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க சிறப்பான பள்ளிக்கூடங்களை அமைத்தோம்.

அனைத்து பகுதிகளிலும் மருந்தகங்கள் (கிளினிக்) அமைத்தோம். நாங்கள் மேற்கொண்ட நலத்திட்டங்களை பார்வையிட மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தார்.

நலத்திட்டங்களை பார்வையிட ஒரு மாநில முதலமைச்சர் மற்றொரு மாநிலத்திற்கு செல்லமாட்டார். ஆனால், அந்த முறையை மாற்றி மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு வந்திருந்தார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மு.க. ஸ்டாலினிடம் ஆணவம் இல்லை. அவர் மக்களுக்கான மனிதர். மக்களின் குடும்பங்களுக்கு பாடுபட மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார்.

தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் போராடும் தலைவராக மு.க. ஸ்டாலின் உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போல வேறு எந்த மாநிலத்திலும் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கு மாதம் ரூ. 1 ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் இல்லை.

பள்ளிகளில் காலை உணவு திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம், பெண்கள், மாநில வளர்ச்சிக்கு முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். என்.டி.ஏ. என்பது டெல்லி கூட்டணி. அ.தி.மு.க. - பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் அவர்கள் இந்த திட்டங்களை நிறுத்திவிடுவார்கள். மகளிர் உரிமைத்தொகையை அவர்கள் நிறுத்திவிடுவார்கள்.

மக்களிடம் கொள்ளையடிப்பதையே அ.தி.மு.க. - பா.ஜ.க. கொள்கையாக வைத்துள்ளது. தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சியடைய மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவளிக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெறும்," என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com