

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகியநிலையில், புதிய அரசியல் கட்சியை துவங்க உள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் அண்ணாமலையின் இந்த விலகலால் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என தற்போதைய மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“அண்ணாமலை பாஜகமீது பல மாதங்களாக அதிருப்தியில் இருந்ததாக தெரிவித்தது குறித்த கேள்விக்கு,
“அதைப் பற்றி நான் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க முடியாது. பாஜக மீதான அதிருப்தி பற்றி நீங்கள் அண்ணாமலை இடம்தான் கேட்க வேண்டும்.” என தெரிவித்தார்.
தொடர்ந்து அண்ணாமலை விலகல் கட்சிக்கு இழப்பு என நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு,
“பாஜக சித்தாந்த அடிப்படையிலான கட்சி. இது இன்று, நேற்று ஆரம்பித்த கட்சி இல்லை. அண்ணாமலை சென்றுவிட்டார் என்பதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.” என தெரிவித்தார்.
தேசிய கட்சிகள் மாநில மொழிகளை பேசுவதில்லை என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு,
“பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் பற்றியும், தமிழர் பற்றியும், தமிழின் பெருமை பற்றியும் பேசி வந்துள்ளார். தமிழ் மக்கள்மீது எப்போதும் பாஜக அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கட்சியை யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பிராந்திய பிரச்னைகளுக்கு பாஜக முக்கியத்துவம் தரவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு” என்று தெரிவித்தார்.