

தி.மு.க அரசை கண்டித்து, அ.தி.மு.க., பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனாநயக கூட்டணி சார்பில் கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணாமலை தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் நோக்கி காரில் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அவரது கார் மேம்பாலத்தில் லட்சுமி மில் சிக்னல் தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, கார் செல்ல முடியவில்லை.
போக்குவரத்து நெரிசல் சரியாவதற்காக சில நிமிடங்கள் அண்ணாமலை காத்திருந்தார். ஆனால் போக்குவரத்து நெரிசல் சரியாகாததால் உடனே அண்ணாமலை தனது காரில் இருந்து இறங்கி தன்னுடன் வந்த பா.ஜ.க நிர்வாகிகளோடு மேம்பாலத்தில் நடக்க ஆரம்பித்தார்.
அவர் சிறிது தூரம் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த ஒருவர் அண்ணாமலையை தனது மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு கூறவே, அண்ணாமலையும் அவரது மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்தார். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததால் அந்த இடத்தை வாகனங்கள் கடப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து அண்ணாமலை மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபருக்கு நன்றி தெரிவித்து, அதில் இருந்து இறங்கி ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்போதும் காரில் வந்த ஒருவர் அண்ணா வாருங்கள் நான் கொண்டு வந்து விடுகிறேன் என்றார். அதற்கு அவர் பரவாயில்லை நான் சென்று விடுகிறேன் என கூறி விட்டு நடக்க ஆரம்பித்தார்.
2 கி.மீ தூரம் பாலத்தில் நடந்து சென்ற அண்ணாமலை, பாலத்தை விட்டு இறங்கியதும், அங்கு காரில் ஏற்கனவே காத்திருந்த இளைஞர் அணி நிர்வாகி ஒருவரின் காரில் ஏறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
அண்ணாமலை மேம்பாலத்தில் வேகமாக நடந்து சென்றபோது, அனைவரும் ஹாய் ப்ரோ என்று கையை அசைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவரும் அவர்களுக்கு கையை அசைத்தபடியே சென்றார்.
அப்போது பாலத்தில் அவருக்கு பின்னால் வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் இறங்கி வந்து அண்ணாமலையுடன் பேசிக்கொண்டே நடந்து சென்றனர்.