

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்களது மகன், மகள்களை தீவிர பிரசாரத்தில் இறக்கி உள்ளனர். பொதுவாக தலைவர்கள் அல்லது பெரியவர்கள் தான் தேர்தல் பிரசாரங்களில் வலம் வருவது வழக்கம். இந்த தேர்தலில் சில வேட்பாளர்கள் தங்கள் மகன், மகள்களையும் தீவிர பிரசாரத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
தருமபுரி தொகுதியில் பா.ம.க வேட்பாளராக போட்டியிடும் சவுமியாவும் தனது மகள்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார். இவரது 2 மகள்களும் வீடு வீடாக சென்று தாய்க்காக தீவிர பிரசாரம் செய்கின்றனர். தனது அம்மாவுக்காக மகள் வேகாத வெயிலில் காய்ந்து, பிரசாரம் செய்ததை பல பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை கவர வேண்டும் என்றால் இளைஞர்கள் பிரசாரம் செய்தால் சரியாக இருக்கும் என வேட்பாளர்கள் நினைக்கின்றனர். அது மட்டுமல்லாமல், பல வேட்பாளர்கள், தங்கள் தேர்தல் வரவு, செலவுகளை கவனிக்கும் பொறுப்பை மகன், மகள்கள் வசம் கொடுத்துள்ளனர். அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் உருவாக்கப்படுவதாகவே இதனை கருதலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.