கொள்ளையர்களுக்கு எதிராக தீரன் சின்னமலையின் வீரத்துடன் போராட மக்கள் உறுதியேற்க வேண்டும்!- அன்புமணி

அநீதிக்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிராக போராடிய தீரன் சின்னமலையின் இந்த வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
கொள்ளையர்களுக்கு எதிராக தீரன் சின்னமலையின் வீரத்துடன் போராட மக்கள் உறுதியேற்க வேண்டும்!- அன்புமணி
Published on

சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெள்ளையர்களுக்கு எதிராக வீரத்துடன் போரிட்ட தமிழ் மாமன்னன் கொங்கு நாட்டு காவலர் தீரன் சின்னமலையின் 270-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரது தீரத்தையும் தேசப்பற்றையும் போற்றி, வணங்குகிறேன். தீரன் சின்னமலையின் வீரவரலாற்றை அனைவரும் அறிந்து கொண்டு தமிழ்நாட்டைச் சுரண்டும் சக்திகளுக்கு எதிராக அவரது வழியில் போராட வேண்டும்.

1756-ம் ஆண்டு இதே நாளில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்தினசாமி-பெரியாத்தா தம்பதிக்கு மகனாக பிறந்தவர்தான் தீரன் சின்னமலை. அவரது இயற்பெயர் தீர்க்கதரிசி சர்க்கரை. கொங்கு நாட்டின் வரிகள் அனைத்தும் மைசூர் அரசுக்கு செல்வதை பொறுக்காத தீர்க்கதரிசி சர்க்கரை, ஒருநாள் அந்த வரிப்பணத்தை சிறைபிடித்து அங்கிருந்த ஏழைகளுக்கு பிரித்து கொடுத்தார்.

அதுமட்டுமின்றி, மைசூருக்கு வரி பணத்தை வசூலித்து செல்லும் அரச பிரதிநிதியிடம், வரிப்பணத்தை சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் ஒரு சின்னமலை பறித்து விட்டதாக போய் உன் அரசிடம் சொல் என்று மிரட்டி அனுப்பினார். அன்றிலிருந்துதான் அவர் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டார்.

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டுவதை அடியோடு எதிர்த்த ஒரு சில வீரதீர மன்னர்களில் தீரன் சின்னமலையும் ஒருவர். குறிப்பாக கேரளம் மற்றும் சேலம் பகுதிகளில் ஆங்கிலேயே படை ஒன்று சேராமல் பார்த்துக்கொண்டதில் இவருக்கு பெரும் பங்குண்டு. அதே சமயத்தில் ஆங்கிலேயர்களை தீவிரமாக எதிர்த்த திப்புசுல்தானின் வீரம் தீரன் சின்னமலைக்கு பிடித்துப் போனது. அதனால், திப்புசுல்தானுடன் கைக்கோர்த்து, கொங்குப்படையை சீரங்கப்பட்டினம் உள்ளிட்ட அதனை சுற்றி நடந்த போர்களுக்கு வழிநடத்தி சென்று திப்பு சுல்தானின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் தீரன் சின்னமலை.

அநீதிக்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிராக போராடிய தீரன் சின்னமலையின் இந்த வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். அதற்காக அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும். அதற்கும் மேலாக, வெள்ளையர்களுக்கு எதிராக தீரன் சின்னமலை எவ்வளவு வீரத்துடன் போராடினாரோ, அதே வீரத்துடன் தமிழ்நாட்டின் கொள்ளையர்களுக்கு எதிராக போராடவும், ஜனநாயக முறையில் வீழ்த்தவும் மக்கள் முன்வர வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com