

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்காததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக திமுக அரசு சித்தரிப்பதைக் கண்டித்தும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அங்குள்ள பட்டியலின மக்கள் அறிவித்துள்ளனர். பட்டியலின மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்திய வேங்கைவயல் நிகழ்வு 26.12.2022-ஆம் நாள் நடந்து மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்று வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்த வழக்கில் முதல் இரு ஆண்டுகளில் காவல்துறை விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட மூவரை காவல்துறை கைது செய்து வழக்குப்பதிவு செய்தது. இப்படியாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், பழிவாங்கலுக்கும் எதிராக போராடி வரும் வேங்கைவயல் மக்கள் அதன் ஒரு கட்டமாகவே தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.
வேங்கைவயல் நிகழ்வில் நீதி வழங்கப்படாததைக் கண்டித்து அங்குள்ள மக்கள் கடந்த மக்களவைத் தேர்தலையும் புறக்கணித்தனர். அதன்பிறகாவது அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு நீதி வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், பட்டியலின மக்களால் என்ன செய்து விட முடியும்? என்ற அலட்சியம் மற்றும் திமிர் காரணமாகவே இத்தகைய அணுகுமுறையை திமுக அரசு கடைபிடித்து வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு பட்டியலின மக்கள் முக்கியக் காரணம். ஆனால், அவர்களின் நலனுக்காக துரும்பைக் கூட அவர்கள் கிள்ளிப்போடவில்லை. அரசுத்துறைகளில் பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை; பட்டியலின மாணவர்களின் விடுதிகளுக்கு நிதி ஒதுக்காமல் அவர்கள் குழம்பு இல்லாமல் வெறும் சோற்றை சாப்பிடும் நிலையை உருவாக்கியது; அச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய மரியாதை அளிக்காதது என பட்டியலின மக்களுக்கு திமுக இழைத்த சமூக அநீதிகள் ஏராளம்... ஏராளம்.
பட்டியலின மக்களுக்கு எதிரான இந்த சமூக அநீதிகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பட்டியலின மக்களுக்கு நீதி கேட்டு போராடுவதற்கு பதிலாக திமுகவின் சமூக அநீதிகளுக்கு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்தன. அதன் விளைவு தான் அந்தக் கட்சிகள் இப்போது மக்களின் ஆதரவையும் இழந்து, திமுகவின் அடக்குமுறைக்கு ஆளாகி தங்களின் வேதனையைக் கூட வெளிப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
பட்டியலின மக்களை வாக்குகளை மட்டும் வாங்கிக் கொண்டு தூக்கி எறியும் துரோக அரசியலைத் தான் திமுக மீண்டும் மீண்டும் செய்து வருகிறது. இதை பட்டியலின மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். திமுகவின் துரோகத்தை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பட்டியலின மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.