என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜனவரி மாதத்தில் ஓய்வுபெற்ற 5 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே?- அன்புமணி கேள்வி
- ஓய்வூதியத் திட்டம் என்பது முழுக்க முழுக்க அரசின் நிதியைக் கொண்டே செயல்படுத்தப்பட வேண்டும்.
- புதிய ஓய்வூதியத் திட்டமும் கிட்டத்தட்ட இதே முறையில் தான் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்திருந்த நிலையில், ஜனவரி மாதத்துடன் ஓய்வு பெற்ற சுமார் 5000 அரசு ஊழியர்களில், புதிய திட்டத்தின்படி ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்களுக்கு அதற்கான ஆணை எதுவும் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தி.மு.க. அரசு திட்டமிட்டு ஏமாற்றி வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறி வந்த குற்றச்சாட்டை இது உறுதி செய்துள்ளது.
ஓய்வூதியத் திட்டம் என்பது முழுக்க முழுக்க அரசின் நிதியைக் கொண்டே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பது அத்தகையது அல்ல. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்து அந்தத் தொகையைக் கொண்டு தான் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய ஓய்வூதியத் திட்டமும் கிட்டத்தட்ட இதே முறையில் தான் செயல்படுத்தப்படுகிறது.
ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது தி.மு.க. அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாகக் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு ஆகும்.
ஆனால், இந்தத் திட்டத்தைக்கூட செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தி.மு.க. அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதிலிருந்தே அதன் மோசடித்தனத்தை அளவிட முடியும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை திட்டமிட்டு ஏமாற்றிய தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.






