

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இணைந்த நிலையில், ராமதாஸ் எந்த அணியில் இணைவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஒரு காலத்தில் பா.ம.க.வுடன் கூட்டணி வைக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது ராமதாஸ் தனித்து விடப்பட்டார்.
அன்புமணி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததால் அங்கு ராமதாஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தி.மு.க. கூட்டணியில் இணைய முயன்ற போது அந்த கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திலும் கூட்டணி சேர முடியாத நிலை ஏற்பட்டு ராமதாஸ் தனித்து விடப்பட்டார்.
ராமதாஸ் அணி பா.ம.க. யாருடன் கூட்டணி சேர்ந்து எப்படி தேர்தலை எதிர்கொள்ளப்போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டது. அவரது ஆதரவாளர்களும் ராமதாசின் முடிவுக்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் திருப்பமாக ராமதாஸ் தரப்பு பா.ம.க. சசிகலா புதிதாக ஆரம்பித்த அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகத்துடன் கூட்டணி அமைத்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் சசிகலா, ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டு தமிழக, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்து உள்ளனர். இந்த கூட்டணிக்கு சேலத்தில் உள்ள ராமதாஸ் ஆதரவு பா.ம.க.வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளரான முக்கிய பிரமுகர் ஒருவர் கூறும்போது,
சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்ததை எங்களால் ஏற்க முடியவில்லை. இது தொடர்பாக விரைவில் கூட்டம் போட்டு எங்கள் எதிர்ப்பை காட்டுவோம். சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பா.ம.க.வினர் இந்த கூட்டணிக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்றார்.