

'அட்சயம்' என்றால் 'குறையாதது' அல்லது 'வளர்ந்து கொண்டே இருப்பது' என்று பொருள். இந்நாளில் செய்யப்படும் நற்காரி யங்கள். தானங்கள் மற்றும் வழிபாடுகள் பல மடங்கு பலன்களைத் தந்து, நம் வாழ்வில் செல்வமும் வளமும் பெருகும் என்பது நம்பிக்கை. லட்சுமி தேவிக்கு உரிய நாளாகக் கருதப்படுவதால், இந்நாளில் தங்கம் வாங்குவது அல்லது குபேர வழிபாடு செய்வது செல்வத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
அந்த வகையில் அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நடப்பாண்டிலும் அதே போல் நகைக்கடைகளில் ஓரளவுக்கு மக்கள் கூட்டம் இருந்தது. நகைகளை ஆர்வமுடன் வாங்கினார்கள்.
பொதுவாக அட்சய திருதியையொட்டி விற்பனை செய்யப்படும் நகைகளின் அளவு குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை யாரும் வெளியிடுவதில்லை. மாறாக சாதாரண நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் விற்பனையாகும் தங்கத்தின் அளவை அட்சய திருதியை நாளுடன் ஒப்பிட்டு அதன் அடிப்படையில் தோராயமாக தகவல்கள் கிடைக்கும்.
அதன் அடிப்படையில், நடப்பாண்டில் அட்சய திருதியை நாள் தங்கம் விற்பனை கடந்த 19-ந்தேதி பிற்பகலில் இருந்து 20-ந்தேதி (நேற்று முன்தினம்) பிற்பகல் வரை சொல்லப்பட்டது. ஆக இந்த 2 நாட்களிலும் நகைக்கடைகளை நோக்கி மக்கள் சென்றனர்.
பொதுவாக முகூர்த்த நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரம் கிலோ அளவுக்கு தங்கம் விற்பனை ஆகும். அதுவே அட்சய திருதியை நாளில், அதைவிட 3 முதல் 5 மடங்கு வரை விற்பனை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை நாளிலும் தங்கம் விற்பனையும் இருந்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சட்டமன்ற தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருப்பதால் இந்த ஆண்டு விற்பனை சற்று குறைவாகவே இருக்கும் என முன்னரே கணிக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல், தங்கம் விலையை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 60 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது. அதாவது, இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதனையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த ஆண்டு விற்பனையில் தங்கத்தின் அளவு குறைந்திருந்தாலும், பண மதிப்பில் கடந்த ஆண்டை போலவே ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு நடந்திருப்பதாக வியாபாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதாவது, எடை அளவில் பார்க்கும் போது சுமார் 9 ஆயிரம் கிலோ என்ற அளவில் வருகிறது. சில வியாபாரிகள் 6 முதல் 7 டன் வரை இருந்திருக்கும் என்றும் தெரிவித்தனர்.