

தமிழ்நாட்டில் இன்னும் 2 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் தான் போட்டியிடும் தொகுதிகளான சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக நேற்று தேர்தல் பரப்புரைக்காக திருச்சி சென்றுள்ளார். திருச்சி சென்ற விஜய் விமான நிலையம் அருகிலுள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார். அதனைத்தொடர்ந்து மசூதியிலும், அதனையடுத்து அம்மன் கோயில் ஒன்றிலும் இறைவனை வழிபட்டார்.
இந்நிலையில் விஜய்யின் இந்தச் செயலை சிபிஎம் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
“த.வெ.க. தலைவர் விஜய் ஒரு தேவாலயத்திற்குள் முட்டி காலில் ஊர்ந்து செல்லும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை ஞாயிறுதோறும் அவர் தேவாலயத்திற்கு செல்லும் பழக்கமுடைய வராக தெரியவில்லை. எனவே, தேர்தல் ஆதாயத்துக்காக அவர் மேற்கொண்ட நாடகக் காட்சியாக தான் இது தோன்றுகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.