சோதனைசாவடியை முற்றுகையிட்ட ஒற்றை யானையால் பரபரப்பு: போலீசார் அலறியடித்து ஓட்டம்

யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சோதனைசாவடியை முற்றுகையிட்ட ஒற்றை யானையால் பரபரப்பு:  போலீசார் அலறியடித்து ஓட்டம்
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனைசாவடியில் ஆசனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. இதை கண்ட போலீசார் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போலீசார் நிம்மதி அடைந்து பெருமூச்சுவிட்டனர். போக்குவரத்தும் சீரானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com