தங்க மோதிரமா? தரமான மகப்பேறு சிகிச்சையா? – தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா கேள்வி

ஊரக பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளின் பிரசவ அறைகளை மேம்படுத்த வேண்டும்.
Jawahirulla
Published on

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்து இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஊரக பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளின் பிரசவ அறைகளை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழகத்தின் பல அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு அறைகளில் நெரிசல், மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை, போதிய படுக்கை வசதியின்மை மற்றும் உபகரணக் குறைபாடுகளுடன் இயங்கி வருகின்றன. பல ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த குறைபாடுகளின் மத்தியில் பிரசவ சேவைகளைப் பெற வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுவது அரசின் முன்னுரிமை சரியான திசையில் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

குழந்தையின் கையில் தங்க மோதிரம் அணிவிப்பதை விட, தாயின் உயிரைக் காக்கும் நவீன மகப்பேறு அறை (வார்டு), குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியவையே மக்களுக்கு உண்மையில் தேவை.

மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் அரசின் கடமை, காட்சிப்படுத்தும் திட்டங்களை அறிவிப்பது அல்ல; மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நீடித்த முதலீடுகளை மேற்கொள்வதாகும்.

தங்க மோதிரம் சில நாட்களுக்கு செய்தியாக இருக்கலாம்; ஆனால் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் பல தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும்.

எனவே, தமிழக அரசு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை கைவிட்டு, அதற்காக ஒதுக்கப்படும் நிதியை குறிப்பாக ஊரக அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு அறைகள், குழந்தைகள் நலப் பிரிவுகள் மற்றும் மருத்துவ கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் திருப்பிவிட வேண்டும். அதுவே சமூக நலனுக்கும், தாய்-சேய் பாதுகாப்பிற்கும், பொது சுகாதார முன்னேற்றத்திற்கும் ஏற்ற பொறுப்பான முடிவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com