

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 25 பேர் சிறுபான்மையினர்கள். இதில் 13 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மரிய வில்சன், தாகீரா உள்ளிட்ட 13 பேர் அக்கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் ஆகி உள்ளனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சிறுபான்மை சமூகத்தில் இருந்து 15 பேர் மட்டுமே எம்.எல்.ஏ.க்களாக இருந்தனர். தற்போது அவர்களது எண்ணிக்கை மேலும் 10 உயர்ந்து 25 ஆக அதிகரித்துள்ளது. தி.மு.க.வில் இருந்து மனோஜ்பாண்டியன், ஆஸ்டின் தேர்வாகி உள்ளனர். மேலும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் இருந்து 2 பேரும், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா (நாகப்பட்டினம்), மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி (சிதம்பரம்) ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இந்த சட்டசபையில் 9 எம்.எல்.ஏ.க்கள் முஸ்லிம்கள் ஆவார்கள். தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து 3 முஸ்லிம்கள் எம்.எல்.ஏ. ஆக தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க.வில் இருந்து ஒருவரும், காங்கிரசில் இருந்து ஒருவரும் எம்.எல்.ஏ.வாகி உள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருந்து கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த லீமா ரோஸ் (லால்குடி) தேர்வாகி உள்ளார்.
இந்த சட்டசபையில் 25 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலித்துகள் அதிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 49 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து 8 பொது தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் 4 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து பொது தொகுதியில் போட்டியிட்ட விசுவநாதன் வெற்றி பெற்றார்.
பிராமணர் சமூகத்தில் இருந்து 2 பேர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். மயிலாப்பூர் தொகுதியில் இருந்து வெங்கட்ரமணனும், ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து ரமேசும் தேர்வு பெற்றனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு பிராமண சமூகத்தினர் எம்.எல்.ஏ.க்களாகி உள்ளனர்.