

ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கே.ஜி. ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. விவசாயி.
இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சாரு (வயது 15). இவர் ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத் தேர்வு நடப்பதால் அதில் கவனம் செலுத்தி வருகிறார். சுந்தர மூர்த்தி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் குணமாகவில்லை.
இந்த நிலையில் சுந்தரமூர்த்தி நேற்று உடல்நிலை குறைவால் பரிதாபமாக இறந்தார். தந்தை இறந்ததால் சாரு கண்ணீர் விட்டு அழுதார். இன்று மாலை சுந்தரமூர்த்தியின் இறுதி சடங்கு நடைபெற்றது. தந்தையின் இழப்பு மாணவிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
வீட்டில் உள்ளவர்கள் இன்று நடைபெற உள்ள கணித தேர்விற்கு நீ சென்று எழுத வேண்டும் என்றனர். இதையடுத்து தந்தை இறந்த துக்கத்திலும் மாணவி பொது தேர்வு எழுத சென்றார். துக்கத்தையும் பொருட்படுத்தாமல் மாணவி பொதுத்தேர்வு எழுதியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.