கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம் - ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

பென்னிகுவிக் நினைவு இல்லம் இடிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. போராட்டத்தில் குதிக்கும் என ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென் தமிழ்நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக செய்தி வந்துள்ளது.

பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தையும் செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்த பென்னிகுவிக்கின் நினைவு இல்லம் தமிழ்நாடு அரசால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், நூற்றாண்டிற்கும் மேற்பட்ட அந்த நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க தி.மு.க. அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் ‘‘மதுரையில் முன்னாள் முதல்-அமைச்சரின் பெயரிலான நூலகம் அமைக்க தேர்வான பொதுப்பணித் துறை கட்டடத்தில் ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் இல்லை’’ என மாவட்ட கலெக்டர் அறிவித்து இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய பென்னிகுவிக் நினைவு இல்லம் இன்றளவிலும் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை அழித்து விட்டால், அப்பகுதி மக்கள் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகும்.

அவர் ஆற்றியப் பணி பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது. குறிப்பிட்ட காலத்தில் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் நிதி ஒதுக்காததால், இங்கிலாந்து சென்று தன்னுடைய குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தவர் பென்னிகுவிக் என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

இதன் பயனாக, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தற்போது பாசன வசதி பெற்று வருகின்றன.

இவரின் தியாகத்தைப் போற்றும் வகையில், தேனி மாவட்டம், லோயர் கேம்பில் பென்னிகுவிக் நினைவு மணி மண்டபத்தை அவரது பிறந்த நாளான 15.01.2013 அன்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்ததையும், அதே நிகழ்ச்சியில், புதிதாக கட்டப்பட்டு வரும் தேனி பஸ் நிலையத்திற்கு ‘‘கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம்’’ என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்ததையும் இங்கே நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழக மக்களுக்காக, குறிப்பாக விவசாயிகளுக்காக பாடுபட்டு முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய பென்னிகுவிக் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு அங்கு கலைஞரின் பெயரில் நூலகம் அமைப்பது என்ற முடிவு, சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம்.

எனவே அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், யாருக்கும் ஆட்சேபணை இல்லாத இடத்தில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தென் தமிழகத்து மக்களின் எதிர்ப்பை மீறி பென்னிகுவிக் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படுமேயானால், விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. போராட்டத்தில் குதிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com