கொரோனா பரவல் அதிகரிப்பு- சேலத்தில் மேலும் ஒரு சிறப்பு சிகிச்சை மையம்

சேலம் இரும்பாலை நிறுவன வளாகத்தின் ஒரு பகுதியில் பிரத்யேகமாக கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று நாளுக்குநாள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. நோய் தொற்றிற்கு உள்ளாகும் நபர்களுக்கு பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. சேலம் மாவட்டத்தில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் பிற தனியார் மருத்துவமனைகள் மூலம் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு நோய் தொற்று ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு சேலம் இரும்பாலை, ஜே.எஸ்.டபுள்யு உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படுபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் சேலம் இரும்பாலை நிறுவன வளாகத்தின் ஒரு பகுதியில் பிரத்யேகமாக கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இச்சிகிச்சை மையத்தில் அமையவுள்ள 500 படுக்கைளுக்கும் ஆக்ஸிஜன் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும், சிகிச்சை மையத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், குடிநீர், கழிப்பறை, சிகிச்சை மையத்திற்கு அவசர ஊர்திகள் வந்து செல்வதற்கான சாலை வசதி, நோயாளிகளின் படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் பணி மற்றும் வடிகால் வசதிகள் ஆகியன போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இச்சிறப்பு மையத்தில் ஏற்படுத்தப்படவுள்ள 500 படுக்கைகளுக்கான ஆக்ஸிஜன் சேலம் இரும்பாலையில் இரும்பு உற்பத்திக்காக தயார் செய்யப்படும் ஆக்ஸிஜன் மூலம் பெறப்படவுள்ளது. மேலும், ஜே.எஸ்.டபுள்யு உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் உதவியுடன் சிகிச்சைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இக்கொரோனா சிறப்பு மையம் அமைப்பதற்கான பணிகளில் சுகாதாரத்துறை, ஊராட்சி துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் மற்றும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றனர். கூடிய விரைவில் இச்சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இந்த மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மலர்விழி வள்ளல், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (மின் பிரிவு) மணிவாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு) வெங்கடாசலம், சேலம் இரும்பாலை, ஜே.எஸ்.டபுள்யு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com