search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈழத் தமிழர்களுக்காக போராடியதில் வைகோவின் பங்களிப்பு மகத்தானது- திருமாவளவன்
    X

    ஈழத் தமிழர்களுக்காக போராடியதில் வைகோவின் பங்களிப்பு மகத்தானது- திருமாவளவன்

    • எம்.ஜி.ஆரும் இலங்கை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான களத்தில் இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
    • இந்திரா காந்தி ஆதரவு இல்லை என்றால் இந்த இயக்கங்கள் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்காது.

    நாகர்கோவில்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டார்.

    அப்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ குறித்து விரிவாக பேசாமல் கடந்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு ம.தி.மு.க.வினர் வருத்தம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை மாநாட்டில் பங்கேற்க வந்த திருமாவளவனிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொருவரும் அவரவர் வலிமைக்கேற்ப ஈழத்தமிழர் பிரச்சனையில் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

    திராவிட கழகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் அவரவர் வலிமைக்கேற்ப பங்களிப்பை செய்துள்ளார்கள். ஒத்துழைப்பை தந்துள்ளார்கள்.

    அண்ணன் பிரபாகரன் அவர்களுடன் நான் பேசும்போது, இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தமிழக தலைவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பு குறித்து கருத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அதில் நான் ஒன்றிரண்டு கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்தி இருக்கிறேன். இதில் தனித்து ம.தி.மு.க. பற்றி மட்டும் கூற நான் விரும்பவில்லை. ஈழ தமிழர்களுக்காக போராடியதில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவின் பங்களிப்பு மகத்தானது.

    எம்.ஜி.ஆரும் இலங்கை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான களத்தில் இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பு வரை ஈழ விடுதலைப் போராட்டத்தை எல்லா கட்சிகளும் ஆதரித்தது. இந்திய அரசும் ஆதரித்தது.

    இந்திரா காந்தி ஆதரவு இல்லை என்றால் இந்த இயக்கங்கள் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்காது. இந்திரா காந்தி தான் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தவர். தமிழகம் முழுக்க இருந்தவர்களுக்கு பயிற்சி அளித்தவர். இதில் விடுதலைப் புலிகளும் அடக்கம்.

    ஆயுதங்களை கீழே போடுங்கள் என ராஜீவ் காந்தி காலத்தில் கூறியதில் தான் முரண்பாடு வந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×