search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எனது தந்தையிடம் அடம்பிடித்து புல்லட் வாங்கினேன்- எடப்பாடி பழனிசாமி ருசிகர பேச்சு
    X

    எனது தந்தையிடம் அடம்பிடித்து புல்லட் வாங்கினேன்- எடப்பாடி பழனிசாமி ருசிகர பேச்சு

    • அடுத்த கட்டத்தில் இருக்கின்ற கிளைக்கழக செயலாளர்கள் என்ன நினைப்பார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.
    • தொண்டன் என்னை சந்தித்து பாராட்டுகின்றபோது உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் நேரலையில் பேசினார். அவர் பேசியதாவது:-

    நான் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்தேன்.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய பிறகு நான் சிலுவம்பாளையத்தில் கிளைக்கழக செயலாளராக எனது அரசியல் பயணத்தை தொடங்கினேன். என்னுடைய அனுபவம் வித்தியாசமானது.

    ஆரம்ப காலத்தில் என்னுடைய தந்தை வெல்லம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது நான் கிளைக்கழக செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோது நான் அரசியலுக்கு வருவதை அவர் வெறுக்கவில்லை. அது உன் சொந்த விஷயம் என்று என்னிடம் தெரிவித்தார்.

    நான் கல்லூரிக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கேட்டேன். அதுவும் புல்லட் தான் வேண்டும் என்றேன். அதனை நீ தாங்கி பிடிக்க முடியாது என்று எனது தந்தை சொன்னார். இருந்தாலும் பரவாயில்லை எனக்கு புல்லட் தான் வேண்டும் என்று அடம்பிடித்தேன்.

    உடனே எனது தந்தை புல்லட் வாங்கி கொடுத்தார்.அதனை என்னால் தாங்கி பிடிக்க முடியவில்லை. எனக்கு பின்னால் உதவியாக ஒருவரை எனது தந்தை அமர்த்தினார். அவர் 3 மாதம் எனக்கு உதவியாக இருந்தார். அப்போது நான் கல்லூரிக்கும் சென்றேன், அரசியலிலும் ஈடுபட்டேன்.

    அதுபோல அனைத்து பெற்றோர்களுமே தன்னுடைய குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டும். சிறப்பான வாழ்வு அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை. இதில் எந்த மாற்றமும் கிடையாது. படிக்கும் காலத்தில் முழு கவனத்தையும் படிப்பிலே செலுத்த வேண்டும்.

    தற்போது கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மூலமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஏகமனதாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அன்றிலிருந்து இன்று வரை தொண்டர்கள் என்னை சந்தித்து வருகிறார்கள். நானும் தொண்டனாக இருந்து தான் இன்றைக்கு பொதுச்செயலாளராக வந்துள்ளேன். எனவே தொண்டன் என்ன நினைப்பான் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

    அடுத்த கட்டத்தில் இருக்கின்ற கிளைக்கழக செயலாளர்கள் என்ன நினைப்பார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அதேபோல் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் நான் அந்த பொறுப்புகளில் இருந்துதான் தற்போது பொதுச்செயலாளராக வந்துள்ளேன்.

    இப்படி நிர்வாகிகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வகிக்கும் பதவி குறித்து நான் அறிந்தவன். தொண்டன் என்னை சந்தித்து பாராட்டுகின்றபோது உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அந்த தொண்டன் உள்ளம் மகிழ்ச்சி பெற வேண்டும். 100 மைலுக்கு அப்பால் இருந்து என்னை தேடி வந்து எனக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்கள்.

    தொண்டர்களின் முகத்தில் புன்முறுவலை பார்க்கின்றபோது என் மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த தொண்டனுடைய மனம் மகிழ்கின்ற அளவுக்கு நாம் பணியாற்ற வேண்டும் என்று எண்ணித்தான் எவ்வளவு சிரமம் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அந்த தொண்டனை மகிழ்ச்சி அடைய வைப்பது தான் எனக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×