சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றப்படுமா?- சபாநாயகர் இன்று முடிவு செய்கிறார்

ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை தற்போது வரை எடப்பாடி பழனிசாமி இருக்கை அருகே தான் உள்ளது. இன்னும் மாற்றப்படவில்லை.சட்டசபை தொடங்கும் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றப்படுமா?- சபாநாயகர் இன்று முடிவு செய்கிறார்
Published on

சென்னை:

தமிழக சட்டசபை வருகிற 17-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கும் இரங்கல் வாசிக்கப்பட்டு சட்டசபை ஒத்திவைக்கப்படுகிறது.

அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வு குழு கூட்டத்தை சபாநாயகர் அப்பாவு தனது அறையில் நடத்துவார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை சட்டசபையில் விசுவரூபம் எடுக்கும் சூழல் உருவாகி உள்ளது.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு ஏற்கனவே ஒரு கடிதம் கொடுத்திருந்தார். அதில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி விட்டதால், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை நியமித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு மற்றொரு கடிதத்தில் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற முறையில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதேபோல் ஓ.பன்னீர் செல்வம் சபாநாயகருக்கு அனுப்பி இருந்த கடிதத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக தான் தொடர்ந்து நீடிப்பதாகவும் சட்டசபையில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

அ.தி.மு.க.வில் இரு தரப்பினரும் போட்டி போட்டுக்கொண்டு கடிதம் கொடுத்திருக்கும் நிலையில் சபாநாயகர் அப்பாவு இன்று இது தொடர்பாக முடிவு செய்கிறார். அவர் எடுக்கும் முடிவை பொறுத்து ஓ.பன்னீர்செல்வம் அமரும் இருக்கை அமையும்.

ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை தற்போது வரை எடப்பாடி பழனிசாமி இருக்கை அருகே தான் உள்ளது. இன்னும் மாற்றப்படவில்லை.

எனவே சட்டசபை தொடங்கும் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com