search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கை கோர்த்து செயல்பட முடிவு: பயன் அடைய போவது யார்?- ஓ.பன்னீர்செல்வமா? டி.டி.வி.தினகரனா?
    X

    'கை' கோர்த்து செயல்பட முடிவு: பயன் அடைய போவது யார்?- ஓ.பன்னீர்செல்வமா? டி.டி.வி.தினகரனா?

    • கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.ம.மு.க. தனியாக நின்று வெற்றி பெற முடியவில்லை.
    • சில தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியைத் தான் தடுத்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து தனது அரசியல் பயணத்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து தொடர முடிவு செய்துள்ளார்.

    இதற்காக டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருவரது கைகளையும் பண்ருட்டி ராமச்சந்திரன் இணைத்து வைத்தார்.

    மூவரும் இணைந்து செயல்படுவது கட்சிக்கு பலம் கொடுக்கும் என்றும் தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்றும் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.

    அதே நேரம் தென்மாவட்ட தொகுதியான திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.பி.உதயகுமார் கூறும்போது ஓ.பன்னீர்செல்வம்-டி.டி.வி.தினகரன் இணைவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் வராது என்று கூறினார்.

    சமுதாய ரீதியான வாக்குகளை குறி வைத்தே மூவரும் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமுதாய ரீதியாக அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் டி.டி.வி.தினகரனும், சசிகலாவும் ஏராளமான நல்ல காரியங்கள் செய்து இருப்பதாகவும் அது இனி கை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

    சமீபத்தில் டெல்லியில் பா.ஜனதா தலைவர்கள் அமித்ஷாவும், ஜே.பி.நட்டாவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினரை சந்தித்து பேசி கூட்டணியை உறுதிப்படுத்தினார்கள்.

    இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பை அதிருப்தி அடைய வைத்தது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து தவிர்க்க முடியாத சக்திகள் என்பதை உணர வைப்போம் என்று ஜே.சி.டி.பிரபாகர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

    அதே நேரம் அரசியல் நிபுணர்கள் ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த முடி வால் அவரது செல்வாக்கு சரியும் என்றே கணித்துள்ளார்கள்.

    இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

    சமூக ரீதியாக பிரிக்க நினைப்பது எடுபடாது. ஏனெனில் எல்லா சமூகத்தினரும் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி மாயத்தேவர் வெற்றி பெற்ற காலம் முதல் அந்த சமூகத்தில் அ.தி.மு.க.வுக்கு கணிசமான செல்வாக்கு இருந்து வருகிறது.

    கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் மீது தீவிர பற்று கொண்டவர்கள். அவ்வளவு எளிதாக மாறமாட்டார்கள். அ.தி.மு.க. வெற்றி பெற நினைப்பவர்கள் ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை ஆதரிக்க யோசிப்பார்கள்.

    மேலும் கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.ம.மு.க. தனியாக நின்று வெற்றி பெற முடியவில்லை. ஆனால் சில தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியைத் தான் தடுத்தது. வரும் காலங்களில் அதே போல் அ.தி.மு.க. பலவீனம் அடையவும் விரும்பமாட்டார்கள் என்றார்கள்.

    Next Story
    ×