search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பண்டிகை- சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
    X

    பொங்கல் பண்டிகை- சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

    • பயண கட்டணம் அதிகம் என்றாலும், குறைந்த நேர பயணம் என்பதால் விமான பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர்.
    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளது.

    ஆலந்தூர்:

    பொங்கல் பண்டிகை விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் சகஜ நிலை மீண்டும் திரும்பி விட்டதால் பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட, வெளியூர் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் இருந்து செல்ல இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆம்னி பஸ், ரெயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே நிரம்பி விட்டன.

    இதனால் தற்போது பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் சொந்த ஊருக்கு விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். பயண கட்டணம் அதிகம் என்றாலும், குறைந்த நேர பயணம் என்பதால் விமான பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர்.

    இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய ஊருக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை இன்று முதல் அதிகரித்து உள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை சோதனை செய்து அனுப்ப வேண்டும். மத்திய தொழிற் படை பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், குடியுரிமை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் என பல சோதனை முடிந்த பின்பு தான் உள்ளே செல்ல முடியும்.

    இன்று ஒரே நாளில் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாவுக்கும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சோதனைகளை முடித்து உள்ளே சென்றனர். இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிலையத்தின் நுழைவாயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சென்றனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணமும் பல மடங்கு உயர்ந்து உள்ளது. சென்னை-மதுரைக்கு இன்று விமான கட்டணம் ரூ.12ஆயிரத்து 500, தூத்துக்குடி-ரூ.10 ஆயிரம், திருச்சி-ரூ.11ஆயிரத்து 500, கோவை-ரூ.11 ஆயிரத்து 500 ஆக உள்ளது. இதே போல் நாளை பயணம் செய்ய இதைவிட கூடுதலாக ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×